கடந்து வந்த பாதை முதல்
நடந்து செல்லும் பாதை வரை
"இறைவனின் படைப்பில் மனித ஜீவன் எண்ணங்களால் உருவாக்கப்பட்டது"- (Thought Evolved Being) நிகழ்வுகளிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் உணரலாம்.
இன்றைய கரூர் மாவட்டம். பள்ளபட்டியில் 1872-ஆம் ஆண்டு முதல் மார்க்கக்கல்வியும், மூன்றாம் வகுப்பு வரை பொதுக்கல்வியும் வழங்கும் "மக்தூமிய்யா மதரஸா " இருந்து வருகிறது: சில திண்ணைப் பள்ளிக்கூடங்களும் இருந்தன. 200 வருட வரலாறு மிக்க - ஐந்து தலைமுறையினரால் நடத்தப்பட்டு வரும் மருதா - முத்து வாத்தியார் பள்ளிக்கூடம் என்னும் பள்ளி நடைபெற்று வருகிறது.
இருப்பினும் சிறுவர்கள் பெரும்பான்மையோரும் விதிவிலக்காக ஐந்தாவது வகுப்பு வரையிலாவது படிக்கும் ஒரு சில மாணவர்களும்; அதற்கு மேல் படிக்க ஆர்வமிருப்பினும் அதற்கான பள்ளி ஒன்று இல்லையே என்று ஆதங்கப்பட்டு மனம் வெதும்பியவர்களாகக், கடைகளுக்குச் சிப்பந்திகளாகப் பணிசெய்ய அனுப்பி வைக்கப்படும் பரிதாபச் சூழல் நிலவியது.
பெற்றோர்களில் பெரும்பாலோர் கல்வியின் மகத்துவம் பற்றியறியாதவர்களாயிருந்தனர். "நம்ம பிள்ளை படிச்சு என்ன கலெக்டர் உத்தியோகமோ. வக்கீல் வாதாட்டமோ செய்யவா போகிறார்கள்"- எனக் கூறுவதன் மூலம் ஏதோ முன்னெச்சரிக்கையாகத் தமது பிள்ளைகள் வழி தவறாமல் பாதுகாத்து இளம்பருவத்திலேயே பிழைப்பதற்கு வழிகாட்டுவதாகக் கருதி கடைகளுக்கு அனுப்பினர்.
சுற்றுப்புறக் கிராமப் பெற்றோர்களோ தங்களின் குழந்தைகளைக் கால்நடைகள் மேய்க்கவும். காடு. தோட்ட வேலைகள் செய்யவும் பயிற்றுவித்து ஆரம்பக்கல்வி கூடத் தமது குழந்தைகளுக்கு கிடைக்க வழிவகை தெரியாதவர்களாகவே இருந்தனர்.
இச்சூழலில் மற்ற ஊர்களில் இயங்கும் கல்வி நிலையங்களையும் அதனால் மேன்மையடையும் சமுதாய மக்களையும் கவனித்தவரும், மக்கள் சேவையே மகேசன் சேவையாக மனத்தில் வரித்தவருமான "வாப்பு" என்ற குடும்ப குழுமத்தின் அல்ஹாஜ் T.M.V. அப்துல் மஜீத் ராவுத்தர் அவர்கள் நமதூரிலும் ஓர் உயர்நிலைப்பள்ளியைத் துவக்கிட வேண்டுமென்ற "இலட்சியப் பிழம்பு உள்ளத்தில்
சுடர்விட" இரவு - பகல் என இடைவிடாது சிந்தித்துத் திட்டமிட்டார். பள்ளபட்டியின் பிரதான பிரமுகர்கள், செல்வந்தர்கள், சமூக நலன் நாடும் நல் உள்ளங்கள் எனப் பலரையும் ஒருங்கிணைத்து "ஓர் உயர்நிலைப்பள்ளியை" உருவாக்க நிதி திரட்டி பள்ளிக்கான இடம் கட்டிடங்கள் கட்டி திருச்சி ஜில்லா போர்டு நிர்வாகத்தில் ஒப்படைத்து விடத் தீர்மானித்தனர். அதற்கான செலவுத் தொகையில் பாதியை மானியமாக அரசிடம் பெற்றுப் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைப்பதென முடிவெடுத்தனர். 1954 - ஆம் நாளன்று நிதி வழங்கியவர்கள், பிரதான பிரமுகர்கள் மற்றும் சுற்றுப்புற ம் பெரியவர்கள் என சுமார் 200 பேர்களை அழைத்துப் பள்ளிக் கட்டிடக் குழு ஒன்று அமைக்கப்பட்டது." பள்ளிக் கட்டிடப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டிருந்தன. எனவே பள்ளியைத் துவக்கி நிர்வகிக்க வேண்டிய நிர்பந்த சூழல் நிலவியது. ஆனால் “திருச்சி ஜில்லா போர்டு" பள்ளியின் நிர்வாகத்தை ஏற்று நடத்த மறுத்ததுடன் பாதி மானியத் தொகையையும் தர ஒப்ப வில்லை. அதன் காரணமாக 20-05-1955 ஆம் நாளன்று "பள்ளபட்டி எஜுகேஷன் சொஸைட்டி"உருவாக்கப்பட்டது.
1955 மே 21ம் நாள் முதல் ஹாஜி T.M.V. : அப்துல் மஜீது ராவுத்தர் அவர்களைத் தாளாளராகக் கொண்டு மற்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து "பள்ளபட்டி மிடில் ஸ்கூல்" என்று பெயரிட்டுப் பள்ளியைத் துவக்க ஆவன செய்தனர். பள்ளிக் கட்டிடத்திற்காகப் பெற்ற கடன் தொகை ஒரு பக்கம் சுமையாகவும். பள்ளிச் செலவினங்களை சமாளித்து நடத்துவது மறுபக்கச் சுமையாகவும் இருந்தன. அவற்றையெல்லாம் உறுப்பினர்களே சமாளித்து இலட்சிய நடைபயின்றன
22-05-1955 ஆம் நாள்தான் பள்ளபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு "அறிவுக் கண் திறக்க கல்வி ஒளி கொண்டு பள்ளி என்ற விளக்கு ஏற்றிய நாள்”. அன்று ஊரும் சுற்றுப்புறமும் ஒன்று திரண்டு பள்ளித் திறப்பு விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பள்ளிக் கட்டிடத்தை நிர்மானிக்க ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பேருதவி செய்த கல்வித்துறை இயக்குநர் திருவாளர் N.D. சுந்தர வடிவேலு M.A., L.T., அவர்கள் பள்ளியைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினார். தமிழறிஞர் திருமிகு. கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களும், கோவை கல்வி துறை டிவிசன் இன்ஸ்பெக்டர் திரு. V.T. டைட்டஸ் M.A., M.Litt., B.T., அவர்களும், திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி திரு. ப. வேதக்கண்ணு M.A., B.T., அவர்களும், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முதல்வர் ஜனாப் M.J. முஹம்மது சையத் M.A., L.T., அவர்களும் மற்றும் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அவர்களால் முறையே தேசத் தந்தை காந்தியடிகளின் படமும், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாந்த் அவர்களின் படமும், பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் படமும், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் படமும் திறந்து வைக்கப்பட்டன.
20-06-1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டு "நமது கல்விச் சேவையாளர்கள் கண்ட கனவு நினைவானது". உயர்நிலைப்பள்ளிக்கான அரசு அங்கீகாரதிற்கு வைப்புத் தொகை செலுத்த வேண்டிய நிர்பந்த நிலையில் ஈடாகச் செலுத்த ரூ.7000/- மதிப்புள்ள தமது சொத்தை நன்கொடையாக எழுதி வைத்த உன்னத மனிதர் நமது நகரத்தந்தை ஹாஜி T.M.V. அப்துல் மஜீது அவர்கள். மேலும் கடனாகப் பள்ளிக்கு வழங்கி இருந்த தொகை சுமார் ரூபாய் பத்தாயிரத்தையும் (ரூ.10000) பள்ளிக்கே நன்கொடையாக வழங்கிய வள்ளல் பெருமான் அவர். அன்றைய நிலையில் கொடுக்கப்பட்ட மேற்கண்ட தொகை இன்றைய மதிப்பீட்டில் என்னவாக இருக்கும் என்பது சிந்தனைக்குரியதல்லவா!
உயர்நிலைப்பள்ளி வரையிலான இடம், கட்டிடங்கள், கிணறு, விளையாட்டுத் திடல் எனப் பள்ளிக்கான பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றியதால் பள்ளி நிர்வாகம் கடன் பட்டுக் கடுமையான நிதி நெருக்கடியில் திண்டாடியது. பள்ளி ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் நிதிப் பற்றாக்குறை நிலவியது. ரூ.80,000/- மதிப்பில் பள்ளியின் கட்டிடப் பணிகளைச் சிறப்பாகத் தரமுடன் அழகுடன் கட்டித் தந்தவரும் பள்ளி உறுப்பினர்களுள் ஒருவருமான ஹாஜி A.C. அப்துல் சலாம் அவர்களுக்குச் சுமார் ரூ. 12,000/ தர 15 இயலாமை ஏற்பட்டது. அத்தொகையை அப் பெருந்தகை கொடையுள்ளத்துடன்ill நன்கொடையாக வழங்கி இன்றும் அதை அறிந்தவர்களின் இதயத்தில் வாழ்ந்து வருகிறார்.
அன்று கடுமையான நிதிப் பற்றாக்குறையை நிவர்த்திக்க கல்வித் தந்தை ஹாஜி T.M.V. அப்துல் மஜீது அவர்கள் பட்ட சிரமங்களும், வடித்த கண்ணீரும் என்றென்றும் உணர்வுள்ள அனைவரின் உள்ளத்தினும் நீங்காத நினைவலைகளாக வந்து நெஞ்சை நெகிழ வைக்கும்! இவ்வூரிலுள்ள ஒவ்வொருவரும் அவரை நன்கு அறிவர். சுறுசுறுப்பும், தெளிவும் பெற்ற பள்ளி மாணவர்களை உடன அழைத்துக் கொண்டு தெருத் தெருவாகத் துண்டேந்தி நிதி வசூல் செய்வார்.
கற்கை நன்றே! கறகை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!
என்ற வரிகளை அவர் சத்தமிட்டு முழங்க உடன் வரும் மாணவர்களும் பெரும் குரலில் உரக்கக் கூறுவர்.
பள்ளி மாணவர்களுடன் தோழமையுடன் பழகுவார். அவர்களுடன் விளையாடுவார். பொது அறிவு நூல்களைப் படிக்கத் தூண்டுவார். மாணவர்களை ஊக்குவிக்க அவரே புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவார். கிராமங்களுக்குச் சென்று அங்குப் படிக்காமல் இருக்கும் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அழைத்து
வந்து பள்ளியில் படிக்க ஆவன செய்வார். உள்ளூர், கிராம மாணவ மாணவியருக்கு இலவசப் பாடப் புத்தகங்கள். உடை, உணவு எனப் பல்வேறு உதவிகளைச் சுயமாக வழங்கி உதவியுள்ளார். பலன் பெற்ற பலரும் 'இந்த ஊரில் ஹாஜியார் என்றால் அது மஜீது ஹாஜியார் மட்டும்தான்" என்று நன்றிப் பெருக்குடன் கூறக் கேட்கலாம்!
பள்ளித் தொடக்க விழாவில் முத்தமிழ்க் காவலர் திருமிகு. கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்கள் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் எனக் கேட்க, அதற்கு ஹாஜியார் அவர்கள் தற்போது 216.. வரும் வருடங்களில் ஆயிரக்கணக்கில் இருக்கும் என பதில் உரைத்தார். (அதாவது பள்ளியின் குழந்தைகள் அனைவருமே தமது குழந்தைகள்தாம் என்ற கருத்தில் கூறினார்.)
பல்வேறு அரசியல் தலைவர்கள், அறிஞர்களை எல்லாம் பள்ளிக்கு அழைத்து வந்து பெருமை சேர்த்த பெருந்தகை அவர். பள்ளியின் நூல் நிலையத்தை அன்றையத் தமிழக முதல்வர் காம வீரர் கு. காமராஜ் அவர்களை அழைத்து வந்து திறக்கச் செய்தார். இவர் தந்த ஊக்கத்தால் பள்ளி மாணவ - மாணவியர்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்.
ஹாஜியார் பதவி விலகலுக்குப் பிறகு அல்ஹாஜ் T.S. அப்துல் சலாம் அவர்கள் தாளாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஹாஜி T.S.A. அவர்கள் தாளாளரான சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹாஜி T.M.V. அப்துல் மஜீது அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்று அவரது மறைவு வரை ஒத்துழைப்பு நல்கி வந்தார். 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் நாளன்று ஏற்காட்டில் மரணமெய்தி பள்ளபட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அல்ஹாஜ் T.S. அப்துல் சலாம் அவர்கள் எஜுகேஷன் சொஸைட்டியின் ஆரம்ப காலம் முதல், பள்ளியின் வளர்ச்சியில் மேன்மேலும் அக்கறையும், ஆர்வமும் < கொண்டவராக விளங்கினார். அவர் உள்ளூரிலும் சுற்று வட்டார மக்களிடமும் மிகுந்த 16 உரிமையுடனும், பாசத்துடனும் பழகுவார். தோற்றத்தில் அமைதியாக இருப்பினும் பள்ளியின் மேன்மைக்கு வெகுவாகப் பாடுபட்டார்.
இவரது 25 ஆண்டு காலச் சேவையில் பள்ளி பல்வேறு வளர்ச்சிகளை எட்டியது. பல புதிய வகுப்பறைகள் உருவாயின. 1978-79-ஆம் கல்வியாண்டில் நமது பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டது. பள்ளியைச் சுற்றினும் மூன்று பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது. மாணவ-மாணவியர் கல்வி, விளையாட்டு N.C.C. மற்றும் பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அவர் 1987-ஆம் ஆண்டு வரை தாளாளராக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்காகத் தம்மை அர்ப்பணித்தார். 1995 ஆம் வருடம் செப்டம்பர் 23-ம் நாள் இறைவனடி சேர்ந்தார். ஒரு மனிதரின் நிர்வாகச் சேவை 25 ஆண்டுகள் என்பது மகத்தானது!
உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே. உடலாலும், பொருளாலும். உணர்வாலும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர், அவர்கள் அன்றையக் காலப் பொருளாதாரச் சமூகச் சூழலில் செய்த பல்வேறு தியாகங்களையும் மறக்க இயலாது. நமது முன்னாள் எம்.எல்.ஏ. அல்ஹாஜ் V.M. அப்துல் ஜப்பார் சாஹிப் அவர்களும் தலைவராகப் பணியாற்றி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
ஹாஜ் T.S.A.அவர்கள் சற்று உடல் நலம் குன்றி பதவி விலகிய நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் ஓர் அற்புத வரவாக வந்து, பள்ளியின் எஜுகேஷன் சொஸைட்டியின் முந்தைய வரலாறு காணாத பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி "இணையில்லா ஓர் இடத்தில் இருந்து இயங்கி வரும் ஒரு சகலகலா வல்லவர்" நமது இன்றையத் தாளாளர் அல்ஹாஜ் M.M. ஷாகுல் ஹமீது அவர்கள்.
இவர் பொறுப்பேற்றதும் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். வளரும் இளம் தலைமுறையினரையும் உடன் இணைத்துக் கொண்டு வழி காட்டியாக இருந்து செயலாற்றி வருகிறார். கணிப்பொறி (கம்ப்யூட்டர்) கல்வியை இன்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இத்தாளாளர் 10 வருடங்களுக்கு முன்பே கணினிப் பயிற்சி வழங்க ஆவன செய்தார்.
ஏழை மாணவர்கள் வசதியின்மையால் இடையிலேயே பள்ளிப் படிப்பை விட்டுச் செல்வதைத் தடுத்துதவ அல்ஹிரா பைத்துல்மால் என்ற ஏழை மாணவர் நிதி உதவி அமைப்பை தோற்றுவித்தார். அதன் வாயிலாகக் கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்கள் உதவி பெறவும். வருடந்தோறும் கல்லூரியில் பயிலும் பல பட்டதாரிகள். தொழிற்கல்வி பயில்வோர்கள் உருவாகவும் காரணமாக விளங்கி வருகின்றார்.
தமிழ் வழி பயிலும் ஆரம்பப் பள்ளி ஊரின் கிழக்குப் பகுதியில் இல்லாத குறையைப் போக்க 'அல்ஹிரா ஓரியண்டல் துவக்கப் பள்ளி" எனும் உயர்தரப் பள்ளியைத் தோற்றுவித்துப் பல ஏழை மாணவர்களின் கல்விக் கண் திறக்க வழி வகுத்துள்ளார். பள்ளபட்டியின் கல்வி வரலாற்றில் ஓர் புதிய திருப்பமாக CRESCENT MATRIC HIGHER SECONDARY SCHOOL எனும் ஆங்கில வழிக் கல்வி நிறுவனம். கரூர் மாவட்ட சிறந்த பள்ளிகளில் ஒன்றாகவும்: பள்ளபட்டியில் முறையான - முன் மாதிரியான ஆங்கிலப் பள்ளியாகவும் பெருமை சேர்த்து வருகிறது. அத்தகைய பள்ளி, இத்தாளாளரின் முயற்சியில் உருவான "எஜுகேஷன் சொஸைட்டியின்" மற்றொரு மைல் கல் எனலாம்! மேலும், கனவிலும் நினையாத வகையில் பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளியில் வானுயரக் கட்டிடங்களாகப் பல வகுப்பறைகள் நிமிர்ந்து நிற்கின்றன. தவிர, பள்ளியின் செலவினங்களுக்கு வழி வகுக்கும் வகையில் முத்தாய்ப்பாய்க் கட்டியுள்ள "பொன் விழா நினைவு வணிக வளாகம்" சிறந்ததோர் கண்மணிக் கருவூலம் கல்வித் தேர்ச்சியை நோக்கும்போது இவரது காலததில இரு பள்ளிகளிலும் அரசு பொதுத்தேர்வுகளில் 94 முதல் 100 சதவீதம் வெற்றியைப் பெற்று வருவது போற்றுதலுக்குரியதாகும். இன்னும் வளர்முகமான திட்டங்களுக்குச் செயல் வடிவம் தந்து "பள்ளபட்டி எஜுகேஷன் சொஸைட்டியின்" அனைத்து நிறுவனங்களும் மேன்மேலும் புகழ் பரப்பி வளர்ந்திட இவருக்கு இறைவன் நல்லருள் புரிய வேண்டுவோமாக!
இப்பள்ளிக்கு வகுப்பறைகள் கட்ட நிதி அளித்ததுடன் பள்ளியின் வளர்முகப் பணிகளில் ஒத்துழைப்பு நல்கி வரும் முன்னாள் மாணவர் மன்றத்தினர்: வகுப்பறைகள் வழங்கிய வள்ளல்கள்: நன்கொடைகள் வழங்கிய நல்உள்ளங்கள். கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டும் பெருந்தகைகள்:
மாணவ,மாணவியரைச் செப்பனிடும் தலைமை ஆசிரியர் ஜனாப் A சைஃபுத்தீன், உதவித் தலைமை ஆசிரியர். ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பள்ளியில் பணியாற்றும் அனைவரின் உழைப்பும் சிறப்புகளும் போற்றுதலுக்குரியவை.
ஏழை மாணவர்களின் கல்விக்குப் படிக்கட்டுகளாய் விளங்கும் அல்ஹிரா பைத்துல்மாலின் தலைவர். நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோரின் தியாகச் சேவைகள் உயர்வானவையாகும்.
பள்ளபட்டி எஜுகேஷன் சொஸைட்டியின் உறுப்பினர் பெருமக்கள் வழங்கும் ஒத்துழைப்பும். ஆலோசனைகளும் உதவிகளும் பெருமைக்குரியவை.
கடந்த காலப் பட்டறிவுகளையும் முன்னோர்கள் நடந்த காலடிச் சுவடுகளையும் கவனமாகக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களுக்காகப் பாடுபட்டவர்களை: வாழ்த்தியவர்களை, வழிகாட்டியவர்களை நினைவு கூர்ந்து, இன்றையப் பொன்விழா குதூகலத்திற்கிடையே "இருக்கும் நிலையில் இருந்து இன்னும் சிறக்கும் இடத்தை அடைய"நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போமாக!
வல்ல இறைவன் நல்லருள் நல்குவானாக